106. அருள்மிகு வெங்கடாசலபதி கோயில்
மூலவர் ஸ்ரீநிவாஸன், வெங்கடாசலபதி
உத்ஸவர் மலையப்ப சுவாமி
தாயார் அலர்மேல் மங்கை, பத்மாவதி தாயார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் ஷேசாசல சுவாமி புஷ்கரணி, பாபவிநாச தீர்த்தம், ஆகாச கங்கை, கோனேரி தீர்த்தம்
விமானம் ஆனந்த நிலைய விமானம்
மங்களாசாசனம் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருப்பாணாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பொய்கையாழ்வார், குலசேகராழ்வார்
இருப்பிடம் திருவேங்கடம், ஆந்திரப்பிரதேசம்
வழிகாட்டி 'திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து நேரடிப் பேருந்து வசதி உள்ளது. இரயில் மற்றும் விமான நிலையம் உள்ளது. சென்னை - பம்பாய் இரயில் பாதையில் உள்ள ரேணிகுண்டா இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். சில ஊர்களிலிருந்து திருப்பதிக்கு நேரிடையாக இரயில் வசதியும் உள்ளது.
தலச்சிறப்பு

Tirupathi Gopuram Tirupathi Moolavarஒரு சமயம் பிருகு முனிவர் திருமாலைக் காண வைகுண்டம் சென்றார். பள்ளி கொண்டிருந்த பெருமாள் அவர் வந்ததைக் கவனிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட முனிவர் பரந்தாமன் மார்பில் எட்டி உதைத்தார். உறக்கம் கலைந்த திருமால் முனிவரின் பாதங்களைப் பற்றி, 'பாதங்கள் வலிக்கின்றனவோ' என்று தடவிக் கொடுத்தார். சாந்தமடைந்த முனிவர் மன்னிப்புக் கேட்டார்.

முனிவர் இடது மார்பில் உதைத்ததால் அங்கு வசிக்கும் திருமகள், வருத்தம் அடைந்து பூலோகம் சென்று திருப்பதிக்கு அருகில் உள்ள 'கொல்லாபுரம்' சென்று மறைந்து வாழ்ந்தார். மகாலஷ்மி சென்று விட்டதால் களையிழந்த வைகுண்டத்தில் இருந்து திருமாலும் புறப்பட்டு பூலோகம் வந்து சேஷாசல மலையில் 'ஸ்ரீநிவாசன்' என்ற திருநாமத்தோடு வகுளாதேவியால் வளர்க்கப்பட்டு வந்தார்.

Padmathi Thayarஇராமாவதாரத்தில் சீதை வடிவில் துன்பங்களை அனுபவித்த வேதவதி, கலியுகத்தில் ஆகாசராஜன் மகளாகப் பிறந்து திருப்பதிக்கு சிறிது தொலைவில் உள்ள நாராயணவனம் என்னும் ஊரில் 'பத்மாவதி' என்ற பெயருடன் வளர்ந்து வந்தார். ஸ்ரீநிவாசனானத் திருமால் பத்மாவதியை மணந்துக் கொண்டார். நாரதர் மூலம் செய்தி அறிந்து அங்கு வந்த லஷ்மியை சமாதானப்படுத்திய பெருமாள், இருவரும் ஒன்றே என்பதை அறிய வைத்தார். அன்று முதல் ஸ்ரீநிவாசன் சேஷாசல மலையிலும், பத்மாவதித் தாயார் திருச்சானூருக்கும் சென்று பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர் என்பது வரலாறு.

Tirupathi Utsavarமூலவர் ஸ்ரீநிவாஸன், வெங்கடாசலபதி என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவர் திருநாமம் மலையப்ப சுவாமி. வேங்கடாத்ரி, சேஷாத்ரி, நீளாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் ஏழு மலைகளுக்கு நடுவில் இக்கோயில் அமைந்துள்ளதால் 'ஏழுமலை' என்று அழைக்கப்படுகிறது. மூலவர் 'ஏழுமலையான்' என்று அழைக்கப்படுகிறார். திருச்சானூர் என்று அழைக்கப்படும் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதித் தாயார் சன்னதியும் உள்ளன. இவருக்கு அலர்மேல் மங்கை என்னும் திருநாமமும் உண்டு.

கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி உள்ளது. ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆதிவராஹ பெருமாளுக்கு தளிகை சமர்ப்பித்த பிறகே ஸ்ரீநிவாஸனுக்கு தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் கோயில்.

திருமங்கையாழ்வார் 62, நம்மாழ்வார் 52, பேயாழ்வார் 19, ஆண்டாள் 16, திருமழிசையாழ்வார் 15, குலசேகராழ்வார் 11, பொய்கையாழ்வார் 10, பூதத்தாழ்வார் 9, பெரியாழ்வார் 7, திருப்பாணாழ்வார் 2, ஆக மொத்தம் 203 பாசுரங்கள் பாடியுள்ளனர்

இக்கோயில் பின்னிரவு 12.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு அரை மணி நேரம் கழித்து 1 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com